நீர்கொழும்பு சிறை கலவரத்திற்கு முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி ஏற்க வேண்டும் – ரஞ்சித் மத்தும பண்டார



நாட்டில் விவசாயிகளின் நெல் கொள்வனவுப் பிரச்சினை மற்றும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் டெங்கு அபாயங்களுக்கு மத்தியில், தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள கலவரமானது புதியதொரு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதுடன், இதற்கான முழுமையான பொறுப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவே ஏற்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெயரில் அரசாங்கம் முன்னெடுக்கும் போலிப் பிரசாரங்கள் மற்றும் முறையற்ற சிறைச்சாலை முகாமைத்துவமே இந்தத் துரதிர்ஷ்டவசமான உயிர்ச்சேதங்களுக்குக் காரணம் என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

திங்கட்கிழமை (06) கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் விவசாயிகளின் நெல் பிரச்சினை, டெங்கு அபாயம் என்பவற்றுக்கு மத்தியில் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியிலிருந்த போது இதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றமைக்கு அப்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அவரது கூற்றுபடி இந்த பிரச்சினைக்கும் அவரே பொறுப்பு கூற வேண்டும். தற்போது சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களாவர். போதைப்பொருள் கடத்தல், விற்பனையுடன் தொடர்புடையவர்கள் பரந்தளவில் கைது செய்யப்படுவதாக அரசாங்கம் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றது. அதன் காரணமாகவே சிறைச்சாலைகளில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஒன்று அல்லது இரண்டு கிராம் போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் கூட சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சந்தேகநபர்களை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது குறித்து அரசாங்கம் முறையாக திட்டமிட வேண்டும். ஞாயிறன்று நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிலைவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் மறுநாளே அந்த நிலைமை மிகவும் மோசமானதாக மாறியுள்ளது.

முந்தைய காலங்களில் வீதிகளில் இவ்வாறான கலவரங்கள் இடம்பெற்றன. ஆனால் இன்று அதிபாதுகாப்பு காணப்படுகின்ற சிறைச்சாலைகளில் கலவரங்கள் இடம்பெற்று உயிர் சேதங்களும் ஏற்படுகின்றன. இதற்கான முழுமையான பொறுப்பை ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்றார்.