நாட்டின் பொலிஸ்மா அதிபரிலிருந்து மரண தண்டனை கைதியாக மாறிய பூஜித் ஜயசுந்தர யார்?


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) பூஜித் சேனாதி பண்டார ஜயசுந்தரவுக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட அமர்வு பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் இந்தத் தண்டனையை விதித்துள்ளது.

1960 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி குருநாகலில் பிறந்த பூஜித் ஜயசுந்தர, இப்பாகமுவ மத்திய கல்லூரி மற்றும் கண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி கற்றதுடன், பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

1985 ஆம் ஆண்டு பரிசோதனை உதவி பொலிஸ் அத்தியட்சகராக (ASP) இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்த அவர், சுமார் 35 ஆண்டுகள் சேவையாற்றி, 2016 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக் காலத்தில் நாட்டின் 34 ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு முன்னரே கிடைத்த புலனாய்வு எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தி நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பின்னர், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை பதவி விலகுமாறு அறிவுறுத்திய நிலையில், அவர் மறுத்ததைத் தொடர்ந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். பின்னர் சி.டி. விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுடன் இணைந்து பூஜித் ஜயசுந்தர மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டு இருவரும் விடுவிக்கப்பட்ட போதிலும், சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த உயர்நீதிமன்றம் அந்தத் தீர்ப்பு சட்டரீதியாக பிழையானது எனக் கூறி வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

மீள விசாரணை நடத்தப்பட்ட இந்த வழக்கில், 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி என பெரும்பான்மை நீதிபதிகள் தீர்மானித்தனர். புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் கடமையைப் புறக்கணித்தமை, குற்றவியல் அலட்சியம் மற்றும் உயிரிழப்புகளுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் காணப்பட்டதைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டது.