
நெல் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திச் செலவுகளை ஈடுசெய்யக்கூடிய நியாயமான கொள்வனவு விலையை வழங்குவதற்காக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குத் தேவையானால் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டின் விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பயிர்களுக்கு நியாயமான விலையையே கோருகின்றனர். முன்னர் கிடைத்த உர மானியம் தற்போது கிடைப்பதில்லை.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பல்வேறு உதவிகளும் குறைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், உரங்கள் மற்றும் விவசாய உற்பத்திக்குத் தேவையான பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், விவசாயச் செலவுகள் பாரியளவில் உயர்ந்துள்ளன.
இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதில் விவசாயிகள் முக்கிய பங்காற்றினர். பெரும்பாலான விவசாயிகள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். ஆனால் இன்று அவர்கள், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் உள்ளனர்.
நெல் விவசாயிகள் தங்களது விளைச்சலுக்கு நியாயமான விலை கோரி வருகின்றனர். தங்களது நெல் விளைச்சலுக்கு கிலோ ஒன்றுக்கு 130 ரூபாய் அல்லது குறைந்தபட்சம் 120 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும். அந்த அளவிலான விலை கிடைக்காவிட்டால், அனைத்து உற்பத்திச் செலவுகளையும் ஈடுசெய்து விவசாயத்தை தொடர முடியாத நிலை உருவாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அனைத்து செலவுகளையும் கணக்கில் எடுத்துப் பார்த்தால், விவசாயிகளின் வாழ்க்கை இன்று மிகவும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. அரசாங்கம் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி, நெல் விளைச்சலுக்கு தற்போது வழங்கப்படுவதை விட நியாயமான கொள்வனவு விலையை வழங்குவதற்கான இணக்கப்பாட்டை எட்ட வேண்டும்.
விவசாயிகள் உள்ளிட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் உடனடி தீர்வுகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.







.jpg)
.jpg)




.png)