நீர்கொழும்பு சிறைச்சாலை உயிரிழப்புகளுக்கு ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் - பொதுஜன பெரமுன




நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் இடம்பெற்ற உயிரிழப்புக்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்க வேண்டும். சகல துறைகளிலும் அரசியல் அழுத்தம் தீவிரமடைந்துள்ளதால் அரச நிர்வாக கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகத்தால் ஒட்டுமொத்த மக்களும் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

மக்கள் தமது அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடும் போது அரசாங்கம் அதனை அரசியல் மயப்படுத்துகிறது. போராட்டத்தின் பின்னணியில் எதிர்க்கட்சிகள் இருப்பதாக குறிப்பிடுகிறது.இது அரசாங்கத்தின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பலர் உயிரிழந்துள்ளார்கள். மோதலுக்கான உண்மை காரணி இதுவரையில் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை.

2020 ஆம் ஆண்டும் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவானது.அப்போது எதிர்க்கட்சியின் உறுப்பினராக இருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிறைச்சாலைக்குள் இடம்பெறும் மோதல் மற்றும் கைதிகள் உயிரிழப்பதற்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் இடம்பெற்ற உயிரிழப்புக்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்க வேண்டும். சகல துறைகளிலும் அரசியல் அழுத்தம் தீவிரமடைந்துள்ளதால் அரச நிர்வாக கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது என்றார்.