தனியார், சர்வதேச பாடசாலைகளையும் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தில் இணைக்க வேண்டும் – ஜனாதிபதி


 

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை போதைப்பொருள் ஒழிப்புத்திட்டத்துக்குள் உள்வாங்குவதற்கான கூட்டமொன்றை நடத்த வேண்டும் என்று என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாட்டுச் சபை, மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் வியாழக்கிழமை (2) ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக செயற்படுத்தப்படும் தேசிய திட்டத்திற்கு அமைய, நிறுவன மட்டத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டங்கள், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள், மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அந்தந்த நிறுவன மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் பரவல் தொடர்பாக நாடளாவிய ரீதியில் ஆய்வு ஒன்றை மேற்கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டது, பாடசாலை முறைமையினுள் போதைப்பொருள் அபாயத்தை ஒழிக்கும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக கல்வி அமைச்சின் முன்னெடுப்பில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்றை நியமித்து, பொதுவான திட்டமொன்றின் கீழ் செயற்படுவதன் அவசியமாகும்.

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் உரிமையாளர்களை போதைப்பொருள் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்துடன் இணைத்துக்கொள்வதற்கான விசேட ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்த வேண்டும்.

கைப்பற்றப்படும் போதைப்பொருள்கள் மற்றும் அவை வழக்குப் பொருட்களாக வைத்திருக்கப்படும் இடங்கள் தொடர்பான முறையான அறிக்கை ஒன்றின் அவசியமாகும். பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறவுள்ள கையிருப்புக்கள், பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுள்ள கையிருப்புக்கள் மற்றும் வழக்குப் பொருட்களாகக் காணப்படும் கையிருப்புக்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை பேணுவது முக்கியமாகும்.

போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வளிப்பதற்கான சட்டமூலமும் இறுதி செய்யப்பட்டுள்ளது, அது விரைவில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது என்றார்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகள் போதைப்பொருள் பாவனைக்குத் தள்ளப்பட்டுள்ளார்களா என்பதைத் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துக் கொள்ளக்கூடிய போதைப்பொருள் பரிசோதனைத் தொகுதிகளை மருந்தகங்கள் மூலம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் நவீன வசதிகளை அறிமுகப்படுத்தல், பகுப்பாய்வுத் திணைக்களத்தின் பணிகளைத் வினைத்திறன் மிக்கதாகச் செய்தல் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப வழிமுறைகளைப் பின்பற்றுதல், மற்றும் போதைப்பொருள் தொடர்பான சட்டங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.