"கைது செய்வது ஆட்சியல்ல" – அரசை கடுமையாக சாடிய அலி சப்ரி


முன்னாள் நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அரசாங்கம் நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட அரசியல் எதிரிகளை கைது செய்து வழக்குத் தொடர்வதிலேயே அதிக கவனம் செலுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற உயிரிழப்புகளுடன் கூடிய மோதலைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே அன்றி, முன்னாள் ஆட்சியாளர்களை தொடர்ந்து குறிவைப்பது அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

டெங்கு பரவல், சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெரிசல், விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்கப்படாமை மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"ஒருவரை கைது செய்வது ஒரு சுகாதாரக் கொள்கையல்ல. விளக்கமறியல் உத்தரவு ஒரு விவசாயக் கொள்கையல்ல. வழக்குத் தொடர்வது ஒரு பொருளாதாரத் திட்டமல்ல. சிறைக் கூடம் நல்லாட்சிக்கான சான்றும் அல்ல," என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நீதியும் பொறுப்புக்கூறலும் சட்டத்தின் ஆட்சியும் அவசியமானவை என்றாலும், விசாரணைகளும் வழக்குகளும் அரசியல் நோக்கமின்றி, சட்டபூர்வமாகவும், நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசியல் அதிகாரம் நிரந்தரமல்ல என்றும், இன்று பலவீனப்படுத்தப்படும் சட்ட மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்காலத்தில் அதே ஆட்சியாளர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இறுதியாக, "பழிவாங்கலை ஆட்சியாகக் கருதக் கூடாது. பழிவாங்கல் அரசின் நோக்கமாக மாறும் போது, நல்லாட்சி முதலில் பலியாகிறது" என்று அலி சப்ரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.