இரகசிய அரசியல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் இனி ஈடுபடமாட்டோம் – நாமல் ராஜபக்ஷ




அரசியல் கூட்டணி தொடர்பாக இனி இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை என்றும், கடந்த காலங்களில் அவ்வாறு செயல்பட்டதாலேயே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பலவீனமடைந்ததாகவும் அதன் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி மீதான மக்களின் நம்பிக்கையை அறிய அரசாங்கம் தமக்கு சாதகமான நிறுவனங்களுக்கு நிதியளித்து கருத்துக்கணிப்புகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பாராளுமன்ற செயற்குழு அறிக்கையை தாமதமின்றி சமர்ப்பித்தால், தேர்தல்கள் ஆணைக்குழு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் என்றும், அப்போது ஜனாதிபதி மீதான மக்களின் உண்மையான நம்பிக்கையை அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அரசியல் கூட்டணி குறித்து எதிர்காலத்தில் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளில் மட்டுமே ஈடுபடுவோம் என்றும், மக்கள் கூட்டணி அமைக்க வேண்டுமென வலியுறுத்தினால் அதனைப் பரிசீலிப்போம் என்றும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் கட்சியை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணையலாம் என்றும், அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து சிறந்த அரச நிர்வாகத்தை உருவாக்குவதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.