அமெரிக்க தூதரகத்தில் நாட்டைப் பற்றி பேசும்போது எனக்கு வெட்கமாக இருந்தது – திலித் ஜயவீர



அமெரிக்க தூதரகத்தின் அமெரிக்க தின நிகழ்வில் நான் கலந்துகொண்டபோது, அங்குள்ள அதிகாரிகளுடன் பேசுகையில் எமது நாடு குறித்து எனக்குள் பெரும் வெட்கமே ஏற்பட்டது என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அன்று எமது நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக அமெரிக்காவின் மிகச்சிறந்த புலனாய்வுக் குழுவினர் இங்கு வந்து, 71 நாட்கள் அரும்பாடுபட்டு ஒரு விசாரணை அறிக்கையை தயாரித்திருந்தார்கள்.

அந்தத் தாக்குதலில் ஐந்து அமெரிக்க பிரஜைகள் உயிரிழந்ததன் காரணமாகவே அவர்கள் அந்தப் புலனாய்வை மேற்கொண்டார்கள். அந்த விசாரணையை மிகச்சிறந்த முறையில் வழிநடத்தியதற்காக எமது நாட்டின் புலனாய்வாளர் உலகளவில் சிறந்த புலனாய்வுக்கான விருதையும் பெற்றிருந்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க, எமது நாட்டு அரசியல்வாதிகள் ஒலிபெருக்கிகளைப் பிடித்துக்கொண்டு, ஏதோ வெற்று அரசியல் பிரசாரங்களை முன்னெடுப்பது போல், இந்த விசாரணை அறிக்கை சரியில்லை என்றும், இதில் வேறு ஏதோ சதி இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, சிரேஷ்ட இராணுவ வீரரான சுரேஷ் சலே போன்றவர்களின் பின்புலத்தை ஆராய்வதாகக் கூறிக்கொண்டு தேவையற்ற விடயங்களை பூதாகரமாக்குகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளால்தான் நாம் உலக நாடுகளின் முன்னிலையில் வேடிக்கை மனிதர்களாக மாறுகிறோம்.

உலக வல்லரசான அமெரிக்காவுடன் நாம் வைத்துள்ள தூதரக உறவுகள் மற்றும் எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கும் எமது மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளி என்ற எமது உறவின் முக்கியத்துவத்தை இவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரசியல் இலாபங்களை கடந்து, எமது நாட்டிற்கு பணம் பெற்றுத்தரும் ஒரு நட்பு நாட்டுடன் இவ்வாறான முட்டாள்தனமான முறையில் நடந்துகொள்வது, எமது நாட்டை மூன்றாவது உலகம் என்பதற்கும் அப்பால் 33 ஆவது உலகத்துக்கு தள்ளிவிடும் ஒரு கீழ்த்தரமான செயலாகும்.

இப்படியான முட்டாள்தனமான மனிதர்கள் வாழும் ஒரு நாட்டிலா நாம் எமது தூதரகத்தை அமைத்துள்ளோம் என்று அங்குள்ள அதிகாரிகள் எங்களைப்பார்த்து ஏளனமாக நினைப்பார்கள்.

எமது நாட்டின் வரலாற்றுப் பெருமைகளை எண்ணி நாம் பெருமைப்பட்டாலும், ஆட்சியாளர்களின் இவ்வாறான முட்டாள்தனமான நடத்தைகளால் இன்று உலக நாடுகளுடன் வர்த்தக ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும்போது ஒரு பிரஜையாக எமது ஆளுமையைப் பயன்படுத்த முடியாமல் நாம் சர்வதேசத்தின் முன்னிலையில் அவமானப்படுகிறோம்.

தங்களின் தகுதியின்மையையே தங்களின் திறமை என்று நினைத்துக்கொண்டு, பொறாமை, வஞ்சகம் மற்றும் குரோதத்தையே தங்களின் கொள்கையாகக் கொண்டு வாழும் மனிதர்களால் இந்த நாட்டிற்கு ஒருபோதும் விடிவைத்தர முடியாது.

தம்மீதே தமக்கு நம்பிக்கையோ அல்லது ஒரு ஒழுக்கநெறியோ இல்லாத இவ்வாறானவர்களால் நாட்டிற்கு புத்துயிரூட்ட முடியும் என்று நாம் எவ்விதத்திலும் எதிர்பார்க்க முடியாது.

எனவே, எமது சர்வஜன அதிகாரம் இயக்கம் மிகப்பெரிய அர்ப்பணிப்புடன் எமது அனைத்து பிரதேச தலைவர்களையும் ஒருங்கிணைத்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது என்பதை மக்கள் நம்ப வேண்டும் என்றார்.