
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் முறையாக முன்னெடுக்கத் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றஞ்சாட்டியுள்ளது.
UNP செயற்குழு உறுப்பினர் தினுக் கொழம்பகே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார நிலைத்தன்மைத் திட்டத்தை NPP அரசு தொடர்ந்தாலும், அதன் முக்கிய அங்கமான பொருளாதார வளர்ச்சி திட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ரூபாவின் பெறுமதி உயர வேண்டும், பணவீக்கம் 3 சதவீதத்திற்குக் கீழ் இருக்க வேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதுடன், பணவீக்கம் 6 சதவீதத்தையும் தாண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டம் தற்போது பொருளாதார நிலைத்தன்மையை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தனித்திட்டமாக மாறியுள்ளதாகவும், அதனுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவில்லை என்றும் தினுக் கொழம்பகே குற்றம்சாட்டியுள்ளார்.
கடன் திருப்பிச் செலுத்துதல், வறுமையைக் குறைத்தல் மற்றும் மக்களின் வருமானத்தை உயர்த்துதல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் எவ்வாறு முன்னெடுக்கப் போகிறது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், பொருளாதார வளர்ச்சித் திட்டமின்றி நிலைத்தன்மை மட்டும் நாட்டை முழுமையான மீட்சிக்குக் கொண்டுசெல்ல முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






.jpg)






.jpg)