
மஹர சிறைச்சாலையைச் சேர்ந்த 104 கைதிகள் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் (செயற்பாடுகள்) ஊடகப் பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், குறித்த கைதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மஹர சிறைச்சாலையின் வீதித் தடைக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புனரமைப்புப் பணிகள் காரணமாக மஹர சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடும் நடவடிக்கை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களின் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று (01) பிற்பகல் மஹர சிறைச்சாலையினுள் கைதிகளால் ஏற்படுத்தப்பட்ட பதற்றமான சூழ்நிலை, சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரால் இணைந்து தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் அறிவித்துள்ளார்.













