இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவுடன் மூவர் இந்தியாவில் கைது


இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 292 கிலோ கஞ்சா போதைப்பொருளை இந்தியாவின் இராமநாதபுரம் க்யூ பிராஞ்ச் பொலிஸார் பறிமுதல் செய்ததுடன், இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் க்யூ பிராஞ்ச் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், உச்சிப்புளி அருகிலுள்ள புதுமடம் பேருந்து தரிப்பிடப் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, கடற்கரையை நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது, காய்கறி மூட்டைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 146 பொதிகளில் (ஒவ்வொன்றிலும் 2 கிலோ வீதம்) மொத்தம் 292 கிலோ கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வாகன சாரதி தங்கராஜ், 50 வயதுடைய சேகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயதுடைய செந்தில்வேலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளில், மதுரையில் செயல்படும் கும்பலொன்றிடமிருந்து கஞ்சாவைப் பெற்று, பரவை சந்தையில் காய்கறிகளை ஏற்றிய பின்னர், புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும், பறிமுதல் செய்யப்பட்ட 292 கிலோ கஞ்சாவும் மேலதிக விசாரணைகளுக்காக இராமநாதபுரம் போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.