சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை: 36 பேர் கைது – படகுகள், வாகனம், கடல் அட்டைகள் பறிமுதல்


நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படைக் கட்டளைகளுக்குட்பட்ட கடற்பரப்பு மற்றும் கடலோரப் பகுதிகளில் இந்த கூட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த ஜூலை 16 ஆம் திகதி நிலாவெளி - சலப்பையாறு கடலோரப் பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய இணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது, மீன்பிடி விதிகளை மீறி இழுவை இயந்திரங்கள் மற்றும் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட 2 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 17 முதல் 31 வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, 17 டிங்கி படகுகள் , 1 கெப் ரக வாகனம், சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள், சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் ஆகியவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சலப்பையாறு, துடுவை, புறாத் தீவு, சூடைக்குடா, அளம்பில், சிலாவத்தை, யாழ்ப்பாணத்தின் கட்டைக்காடு, தலைமன்னாரின் வங்களாப்பாடு மற்றும் கற்பிட்டிக்கு அப்பால் உள்ள இப்பந்தீவு ஆகிய கடலோரப் பகுதிகளில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட படகுகள், வாகனங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி, காட் பே, மூதூர், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.