கைதிகளில் ஒரு சிலர் இன்று பிற்பகல் சிறைச்சாலையின் பிரதான கட்டடத்தின் கூரை மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு தரப்பினர் கட்டத்தின் பிரதான பகுதிகளுக்கும், பிரிவுகளுக்கும் தீ வைப்பதற்கு முயற்சித்துள்ளார்கள்.
இதனை தடுப்பதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு இராணுவத்தினரையும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரையும் அழைத்துள்ளனர்.
சிறைச்சாலை கைதிகள் பதிவு பிரிவு, ஜெயிலர் அலுவலகம் மற்றும் பிரதான கட்டங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் பதற்ற நிலைமை ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறைச்சாலையின் பிரதான கட்டத்தில் தீ பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் சிறைச்சாலைக்குள் வரவழைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அம்புலன்ஸ் வண்டிகளும் சிறைச்சாலைக்குள் அழைக்கப்பட்டன.
நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், கடற்படையினரும், பொலிஸாரும் சிறைச்சாலை வளாகத்துக்குள் அழைக்கப்பட்டனர். சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறைக் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன்பாக கூடி கூச்சலிட்டு தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று சிறைச்சாலை உத்தியோகத்தர்களையும், பொலிஸாரையும் நோக்கி கேள்வியெழுப்பினர்.இவ்வாறான பின்னணியில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலை முன்பாகவும், சிறைச்சாலையை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டனர்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும், சிறைக் கைதிகளுக்கும் இடையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இந்த பதற்றநிலைமை ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இந்த பதற்றநிலைமையால் ஏற்பட்ட மோதலால் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 கைதிகள் காயமடைந்துள்ளனர்.இவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தொடர்ந்து கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமது உறவுகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா அவர்களை பார்ப்பதற்கு தமக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் பாதுகாப்புக்கு தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டும். சிறைச்சாலை நெரிசலினால் தான் இவ்வாறு மோதல்கள் ஏற்படுகின்றன. ஆகவே இந்த நெரிசலை குறைப்பதற்கு குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஆகவே அந்த அறிக்கைக்கு அமைய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கைதிகளின் உறவினர்கள் கருத்து தெரிவித்தார்கள்.





.jpg)








