பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; சில கடல் பகுதிகளில் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் வாய்ப்பு!


மத்திய, சப்ரகமுவ, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களில் வானம் முகில் செறிந்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 - 70 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான அல்லது மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.