அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய சம்பவம்: உப பொலிஸ் பரிசோதகர் இடமாற்றம்


அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்துக்குள் நபரொருவர் செயற்பட்ட விதம் தொடர்பில் குறித்த சந்தேக நபரைக் கைது செய்த குழுவுக்குப் பொறுப்பாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், காலி திசைக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு அப்பாற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தனது தந்தையை பொலிஸார் தாக்கியதாகக் கூறி, நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் பதற்றமான முறையில் நடந்துகொள்ளும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இது குறித்துப் பொலிஸார் கூறுகையில், குறித்த முதியவர் 24ஆம் திகதி இரவு மதுபோதையில் வீதியில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதால் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்ய முற்பட்டபோது அவர் தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததாலேயே காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

குறித்த முதியவர் பலப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பலப்பிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மேலும், இவ்விசாரணையின் முடிவுகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.