.jpg)
கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள ஆலயத்தில், அதன் பிரதான குருக்களினால் திருடி அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் அனைத்தும், ஆலய தர்மகர்த்தாக்களின் நிதி உதவியின் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆலய தர்மகர்த்தாக்கள் இருவரும் தலா 12.4 மில்லியன் ரூபா தனிப்பட்ட நிதி நன்கொடை வழங்கியதையடுத்து, அந்த நிதியைக் கொண்டு, அடகு வைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆலயத்தில் கடமையாற்றிய பிரதான குருக்கள் நகைப் பெட்டகத்தின் சாவியைப் பயன்படுத்தி நகைத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் தான் திருடிய நகைகளை, கொட்டாஞ்சேனைப் பகுதியில் உள்ள வங்கி மற்றும் அடகு நிலையங்கள் என மூன்று வெவ்வேறு நிறுவனங்களில் அடகுவைத்து, மொத்தமாகப் பெற்ற சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாவைச் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய உற்சவத்தின்போது நகைப்பெட்டகத்தைத் திறந்தபோதே நகை திருட்டு வெளிச்சத்துக்கு வந்தது. அதனையடுத்து ஆலய நிர்வாகத்தினர் கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான பிரதான குருக்கள், வெளிநாடு செல்ல நீதவான் தடை உத்தரவு பிறப்பித்தார்.
அத்தோடு, சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





.jpg)





.jpg)
