பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு : அக்கரைப்பற்று முன்னாள் மேயர் விளக்கமறியலில்


(பாறுக் ஷிஹான்)


அக்கரைப்பற்றில் உள்ள அரச திணைக்களமொன்றில் பணியாற்றிய பெண் உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், வாக்குமூலம் வழங்குவதற்காக செவ்வாய்க்கிழமை (18) சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு சென்ற முன்னாள் மேயர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபரை புதன்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.