கல்முனை வடக்கு வைத்தியசாலை ஆடை விவகாரம் : தீர்வு காண உடனடியாக தலையிட்டேன் – ஆதம்பாவா எம்.பி.



(ARM. மஜீட் & மின்மினி மின்ஹா)



​கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட 9 முஸ்லிம் பெண் ஊழியர்கள் ஆடை விவகாரம் காரணமாக கடமையில் இணைவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தாம் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தெரிவித்தார்.

இன்று (13) ​சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சமுர்த்தி வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் இன, மத வேறுபாடுகளை மறந்து விட்டுக்கொடுப்புடன் வாழ்வதே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும் என்றார்.

​அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது வலுவாக வலியுறுத்தினார்.

​குறித்த நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து அல்ஹாஜ் எஸ்.எல். முகம்மது ஹணீபா, அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.கரன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.