கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம் : வைத்தியசாலை கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம்


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சீருடை தொடர்பில் அமைச்சுக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை. அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டு வைத்தியசாலை கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன். தமக்கு ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதனை சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கலாம். உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கல்முனை –வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார கனிஷ்ட உதவியாளராக நியமனம் பெற்றுள்ள பெண் முஸ்லிம் சேவையாளர்களின் சீருடையை அடிப்படையாகக் கொண்டு எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

வைத்தியசாலை கட்டமைப்பில் சீருடை உள்ளது. அந்த துறையில் குறித்த பிரச்சினை தொடர்பில் அமைச்சுக்கு எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை.

நீண்டகாலத்துக்கு பின்னர் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இல்லாமல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 92 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் தகுதி மற்றும் புள்ளி அடிப்படையில் 1900 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்களில் 1860 பேர் அளவில் நியமனங்களை பெற்றுக்கொண்டுள்ளார்கள். 90 ஆயிரம் பேர் அளவில் வெளியில் உள்ளார்கள்.

அநாவசியமான பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டு வைத்தியசாலை கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தமக்கு ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதனை சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கலாம். உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.