நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை – மூன்று விற்பனையாளர்களுக்கு அபராதம்
ஹெட்டிப்பொல பகுதியில் மோட்டார் சைக்கிள்களின் விலைகளை காட்சிப்படுத்தத் தவறியமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்தமை தொடர்பில் மூன்று விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு அதிக கேள்வி நிலவுவதுடன், சந்தையில் அவற்றுக்கான விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிலர் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை மறுவிற்பனை செய்வதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கடந்த ஜூலை 27ஆம் திகதி ஹெட்டிப்பொல பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகளால் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
சில பிரபலமான மோட்டார் சைக்கிள் வகைகளுக்கான கையிருப்பு, தற்போதைய கேள்வியைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதாக இல்லை என அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக, நுகர்வோருக்கு நியாயமான முறையில் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில், முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் காத்திருப்புப் பட்டியல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும், சில தரப்பினர் வெவ்வேறு நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களை பெற்றுக்கொண்டு, பின்னர் அவற்றை அதிக விலைக்கு நுகர்வோருக்கு மறுவிற்பனை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் பின்னர், மூன்று மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்களுக்கு எதிராக ஹெட்டிப்பொல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அவர்களில் ஒரு விற்பனையாளர், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரால் 790,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை 850,000 ரூபாய்க்கு விற்பனை செய்ததுடன், விலையை காட்சிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டிலும் குற்றவாளியாக காணப்பட்டார். அவருக்கு இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மற்றுமொரு விற்பனையாளர், 790,000 ரூபாய் நிர்ணய விலையுடைய மோட்டார் சைக்கிளை 845,000 ரூபாய்க்கு விற்பனை செய்தமை மற்றும் விலையை காட்சிப்படுத்தத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டார்.
மூன்றாவது விற்பனையாளர், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களின் விலைகளை காட்சிப்படுத்தத் தவறியமைக்காக 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டார்.
மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கு முன்னர் அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட விலைகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் அல்லது விலைகளை காட்சிப்படுத்தத் தவறுதல் உள்ளிட்ட முறைப்பாடுகளை அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் எனவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.






.jpg)

.jpg)





