இலங்கையில் முதல் முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கு தனிப்பாதை


நாட்டின் பிரதான வீதிகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அவற்றுக்கென பிரத்யேகமான ஒரு விசேடப் பாதையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் வீதிப் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தனியார் துறையின் பங்களிப்புடன் "100 for 100" விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டம் நேற்று (03) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இத்திட்டத்தின் ஆரம்பக் கட்டம் களுவாஞ்சிகுடி நகரை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நாட்டில் ஆண்டுதோறும் பதிவாகும் வீதி விபத்துகளில் பெரும்பான்மையானவை மோட்டார் சைக்கிள்களுடன் தொடர்புடையவை என்பதால், விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் வீதி விபத்துகளால் ஆண்டுதோறும் சுமார் 2,500 பேர் உயிரிழந்து வருவதுடன், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 2,750 பேர் உயிரிழந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 1,400 பேர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த காலங்களில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் காரணமாக சுமார் 9,000 மனித உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன.

நாட்டின் வீதி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், மோட்டார் சைக்கிள் பயன்பாட்டில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கும் இது அவசியமானது. இலங்கையில் முதன்முறையாக கல்குடா நகரில் பிரதான வீதியின் ஒரு பகுதி மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேகமாக ஒதுக்கப்படவுள்ளதுடன், அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு அதிகம் என்பதால் வெள்ளை வரிகளுக்குப் பதிலாக வேகத் தடைகளை அமைத்து இந்த பாதை உருவாக்கப்படவுள்ளது.

பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, மோட்டார் சைக்கிளை எவ்வாறு பாதுகாப்பாக ஓட்டுவது, வாகனத்தை முறையாகப் பராமரிப்பது, தலைக்கவசம் அணிவதன் அவசியத்துவம் மற்றும் வழிப்போக்கர்களின் பாதுகாப்பு குறித்து விரிவான விழிப்புணர்வு இத்திட்டத்தினூடாக வழங்கப்படுகின்றது.

இதன் முதலாம் கட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 100 நிறுவனங்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், ஒரு நிறுவனத்திலிருந்து 100 ஓட்டுநர்கள் வீதம் மொத்தம் 10,000 ஓட்டுநர்கள் ஒரே கட்டமாக விழிப்புணர்வு பெறவுள்ளனர். வீதி விபத்துகளைக் குறைத்து ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், நாட்டில் மேம்பட்ட போக்குவரத்து கலாச்சாரத்தை உருவாக்குவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்றார்.