பழமையான பேருந்துகளும் குறைந்து வரும் ஊழியர்களும்: கடினமான பாதையில் இலங்கை போக்குவரத்துச் சபை


இலங்கை போக்குவரத்துச் சபையிடம் (SLTB) பழமையான பேருந்துகள் அதிகளவில் உள்ள நிலையில், தற்போது சுமார் 5,016 பேருந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுத் தொழில் முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழுவான கோப் குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான மொத்தம் 7,130 பேருந்துகளில், இயந்திரக் கோளாறுகள் மற்றும் சாரதிகள், நடத்துநர்கள் பற்றாக்குறை காரணமாக 2,100க்கும் அதிகமான பேருந்துகள் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை.

சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் பற்றாக்குறையால் நாடு முழுவதும் சுமார் 300 முதல் 400 பேருந்துகள் வரை சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவையில் ஈடுபடுத்தப்படாத பேருந்துகளில் சுமார் 200 பேருந்துகளைப் பழுதுபார்த்து மீண்டும் சேவையில் இணைக்க முடியும் என நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகாரிகள், மொத்தப் பேருந்துகளில் சுமார் 50 சதவீதமானவை 10 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமையானவை எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படும் சுமார் 1,780 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமையானவை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன, தற்போது பயன்படுத்தக்கூடிய பேருந்துகளின் எண்ணிக்கை பயனுள்ள போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்குப் போதுமானதாக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் போக்குவரத்துத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 7,339 பேருந்துகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 பேருந்துகள்  சேவையிலிருந்து நீக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பேருந்துப் சேவையை வலுப்படுத்த இலங்கை போக்குவரத்துச் சபை திட்டமிட்டுள்ளதாக சஜீவ கனகரத்ன கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை 5,600 ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, 49 முதல் 54 ஆசனங்களைக் கொண்ட 600 சாதாரண பேருந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், 200 சொகுசுப் பேருந்துகளை கொள்வனவு செய்வதும் இந்த ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் நிறுவனத் திட்டங்களில் ஒன்றாகும்.

புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மற்றும் பழுதுபார்க்கப்படும் சுமார் 1,000 பேருந்துகள் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துப் சேவையில்  இணைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைக் கருத்திற்கொண்டு, 2030ஆம் ஆண்டளவில் சுமார் 250 மின்சாரப் பேருந்துகளை இயக்கவும் இலங்கை போக்குவரத்துச் சபை திட்டமிட்டுள்ளது.

அதேவேளை, ஊழியர்களை புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சஜீவ கனகரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.