நகரப் பயணிகள் பாதுகாப்பாகவும், சுலபமாகவும், வேகமாகவும், அதேவேளை நம்பகத்தன்மையுடனும் தங்களது பயணங்களை மேற்கொள்வதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இப்பேருந்துகள் மூலம் பசுமையான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை உறுதிசெய்வதுடன், பயணிகள் தங்களது இலக்குகளை வசதியாகச் சென்றடைவதும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்தின் கீழ் மாகும்புரவிலிருந்து புறக்கோட்டை வரையிலான 23.3 கி.மீ கொண்ட பாதை, மில்லேனியம் சிட்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலான 22.3 கி.மீ கொண்ட பாதை, கடவத்தையிலிருந்து மாக்கும்புர வரையிலான 28.7 கி.மீ கொண்ட பாதை, தெமட்டகொடையிலிருந்து பாணந்துறை வரையிலான 28.7 கி.மீ கொண்ட பாதை, பத்தரமுல்லையிலிருந்து ஏக்கலை வரையிலான 29.9 கி.மீ கொண்ட பாதை, கொள்ளுப்பிட்டியை மையமாகக் கொண்ட 14 கி.மீ சுற்றுவட்டப் பாதை மற்றும் கெஸ்பேவையிலிருந்து புறக்கோட்டை வரையிலான 35.7 கி.மீ கொண்ட பாதை என 7 புதிய பாதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, இத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக கடந்த 29 ஆம் திகதி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 மெட்ரோ பேருந்துகளைச் சுமந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வந்தடைந்தது.
பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உயர்தரச் சொகுசு வசதிகளைக் கொண்ட இப்பேருந்து ஒன்றின் பெறுமதி 42 மில்லியன் ரூபாவாகும். முதற்கட்டமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளை இணைக்கும் பிரதான பாதைகளில் இப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளதுடன், 'LMTGO' எனும் மொபைல் செயலியைப் பயன்படுத்தி பேருந்து தற்பொழுது பயணிக்கும் இடத்தை நேரலையாகக் (Live tracking) கண்காணிக்கும் வசதியும், கியூ.ஆர் குறியீடு மூலம் சுலபமாக பயணக் கட்டணத்தைச் செலுத்தும் நவீன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரையான காலப்பகுதியில் மாகும்புர, கடவத்தை, கொழும்பு கோட்டை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பிரதான மையங்களை அடிப்படையாகக் கொண்டு இச்சேவைகள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் பயணங்களை இலகுபடுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த புதிய மெட்ரோ பேருந்துத் திட்டம் நகர்ப்புறப் பயணிகளுக்கு மாபெரும் நன்மையாக அமையும் எனவும், எதிர்காலத்தில் இப்பேருந்து சேவைகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் மேலும் விரிவுபடுத்தப்படும்.





.jpg)






.jpg)

