சிறைச்சாலை பதற்றம் குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய நாமல் ராஜபக்ச
அண்மையில் மீண்டும் ஏற்பட்டுள்ள சிறைச்சாலை பதற்றநிலையைத் தொடர்ந்து, நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் அவசர சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில வாரங்களுக்குள் சிறைச்சாலைகளில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பெரிய பதற்றச் சம்பவம் இதுவாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறான சம்பவங்கள் தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்றும், மோசமான நிர்வாகம், அலட்சியம் மற்றும் கடுமையான அழுத்தத்தில் இயங்கும் சிறைச்சாலை அமைப்பின் ஆழமான கட்டமைப்பு குறைபாடுகளையே வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல என்றும், தலைமைத்துவப் பற்றாக்குறை மற்றும் நிறுவனங்களின் செயல்திறன் சீர்குலைந்திருப்பதற்கான அறிகுறி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தொடர்ச்சியான நெருக்கடி நிலை இருந்தபோதிலும், சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஏன் இன்னும் நிரந்தர சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமிக்கப்படவில்லை எனவும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
"இவ்வளவு முக்கியமான இந்தப் பதவி ஏன் இன்னும் நிரந்தரமாக நிரப்பப்படவில்லை?" என அவர் வினவியுள்ளார்.
அத்துடன், கூடுதல் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்துவது தற்காலிகமாக நிலைமையைக் கட்டுப்படுத்த உதவினாலும், பிரச்சினையின் அடிப்படை காரணங்களை அது தீர்க்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் காணப்படும் அதிக நெரிசல், போதிய வசதிகள் இல்லாமை, சுகாதார சேவைகளின் குறைபாடு மற்றும் பயனுள்ள மறுவாழ்வு திட்டங்கள் இல்லாமை போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"சிறைத்தண்டனை என்பது ஒருவரின் சுதந்திரத்தை மட்டுமே பறிக்கிறது; அவரின் கண்ணியத்தை அல்ல" எனக் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச, நெருக்கடி ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதை விட, சிறைச்சாலை அமைப்பின் அடிப்படை குறைபாடுகளை நீக்கும் நீண்டகால சீர்திருத்தங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.














