
அரசாங்கம் தானாகவே வீழும் வரை பார்த்துக்கொண்டிருக்காமல், நாட்டின் ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க மக்கள் அனைவரும் உடனடியாக வீதியில் இறங்கி தலைமைத்துவத்தை ஏற்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தியுள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தை மாற்றவேண்டும் எனப் பெரும்பான்மையான மக்கள் விரும்பிய போதிலும், அதை யாராவது ஒருவர் செய்து தருவார்கள் என்று காத்திருப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. ஜனநாயகப் போராட்டத்தில் மக்களே நேரடியாகப் பங்கேற்க வேண்டும்.
தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எதனையும் தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல், எரிபொருள் விலையைக் குறைத்தல், நெல்லுக்கு 150 ரூபா நியாயமான விலை வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல் போன்ற எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இன்று விவசாயிகள் 95 ரூபாவுக்கே நெல்லை விற்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாட்டில் நீதித்துறை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அதை அரசியல்மயமாக்குவதன் மூலம் வடகொரியாவைப் போன்ற ஒரு கட்சி மட்டுமே ஆட்சி செய்யும் சர்வாதிகாரப் போக்கை நோக்கி அரசாங்கம் நகர முயற்சிக்கிறது.
மேலும், மக்கள் பிரதிநிதிகளோ அல்லது அரசு நிறுவனங்களின் தலைவர்களோ சுயாதீனமாகச் செயற்பட முடியாமல், பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளின் உத்தரவுகளுக்கமையவே அனைத்துப் பணிகளும் நடைபெறுகிறது.
எனவே, நாட்டில் ஜனநாயகம் முற்றாக அழிந்துபோவதைத் தடுக்கவும், சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தவும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் ஒன்றுபட வேண்டும் என்றார்.



.jpg)

.jpg)
.jpg)


.jpg)
.jpg)
