சிறைச்சாலை மோதல்களுக்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம்; புதிய சிறைச்சாலைகளை உடனே அமைக்க வேண்டும் – சம்பிக்க ரணவக்க


சிறைச்சாலை மோதல்களுக்கு அரசாங்கத்தின் அலட்சியப்போக்கே காரணம். நிட்டம்புவ மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிறைச்சாலை தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு முயற்சித்தோம். அந்த இரு திட்டங்களையும் உடனடியாகச் செயற்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தைத் தொடர்ந்து மஹர சிறைச்சாலையிலும் தீவிர மோதல் நிலைமையொன்று உருவானது. சிறைச்சாலைகளில் காணப்பட வேண்டிய கொள்ளளவை விட நான்கு முதல் ஐந்து மடங்கு அதிகமான கைதிகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பதே இத்தகைய சம்பவங்களுக்கு முதன்மையான காரணமாகும். நிலைமையை ஆழமாக ஆராயும்போது, பிணை வழங்குவதில் நிலவும் சிக்கல்கள் காரணமாகவே பெருமளவிலானோர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது புலனாகின்றது.

தற்போது சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 48,000 கைதிகளில், கிட்டத்தட்ட 35,000 பேர் பிணை தொடர்பான பிரச்சினைகளினாலேயே அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன. முதலாவதாக, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் விசேட திட்டங்களின் கீழ் பெருமளவிலானோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகின்றனர். இவர்களில் 15,000 க்கும் மேற்பட்டோர் இரசாயன பகுப்பாய்வாளர்சுநிழசவள ஃ அறிக்கைகள் தாமதமாவதால் நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவதாக, 10 கிராமுக்கு மேற்பட்ட அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான போதைப்பொருள் வழக்குகளில் பிணை பெறுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறான தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சிக்கல்களினால் பெருமளவிலான சந்தேகநபர்கள் விளக்கமறியலில் தொடர்ந்தும் வாடுகின்றனர். அதேபோன்று, நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் வழக்குகள் தேங்கி நிற்பதன் காரணமாகவும் ஏராளமானோர் சிறைச்சாலைகளில் முடங்கிக்கிடக்க நேரிட்டுள்ளது.

தற்போது சிறைச்சாலைகளில் அடிப்படை மனித வசதிகள் ஏதும் இல்லை. குடிநீர் வசதி, மலசலக்கூட வசதிகள் மற்றும் உறங்குவதற்குக் கூட போதிய இடவசதிகள் கிடையாது. எலிகள், கொசுக்கள் மற்றும் கரப்பான்கள் நிறைந்த மனிதநேயமற்ற சூழலே அங்கு நிலவுகின்றது. சிறிய தவறுகளுக்காக சந்தேகத்தின் பேரில் சிறைக்குச் செல்லும் நபர்கள், அங்கிருந்து வெளியேறும்போது குற்றவாளிகளாகவும் பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்களாகவுமே வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எமக்கு இரு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. ஆனால் சிறைச்சாலைகள் அமைச்சராக உள்ளவர் வெறும் உரைகளை மட்டுமே ஆற்றி வருகின்றார். துப்பாக்கிச் சூடுகளினாலும் அடக்குமுறைகளினாலும் மட்டுமே இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியாது. இதற்கு முறையான தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு ரீதியான அணுகுமுறையே அவசியமாகும்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் நிட்டம்புவ மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிறைச்சாலை தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு முயற்சித்தோம். அந்த இரு திட்டங்களையும் உடனடியாகச் செயற்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம். இதனை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் மிக இலகுவாகச் செய்து முடிக்க முடியும் என்றார்.