இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை – 100 முதல் 120 பேர் மட்டுமே உள்ளதாக தெரிவிப்பு



நாட்டில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மனநல வைத்தியர்களுக்கு வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது, மனநல வைத்தியர்களின் பற்றாக்குறைக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக விசேட மனநல வைத்தியர் பேராசிரியர் சதுரி சுரவீர சுட்டிக்காட்டினார்.

"மனநல வைத்தியர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிட்டளவு குறைபாடு காணப்படுகிறது. ஏனெனில் இலங்கையிலுள்ள மனநல வைத்தியர்களுக்கு அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகளில் எந்நேரமும் வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும் இங்கு வழங்கப்படும் பயிற்சியும் பெரிதும் மதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தச் சிக்கல் தொடர்ச்சியாக நிலவுகிறது. தற்போது சுமார் 100 முதல் 120 வரையிலான விசேட மனநல வைத்தியர்கள் உள்ளனர். அவர்களிடம் சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கிளினிக் மற்றும் தேசிய மனநல நிறுவனத்தின் கிளினிக் ஆகிய இரண்டிலும், ஒரு காலை நேர கிளினிக்கிற்கு மட்டும் சுமார் 150 நோயாளர்கள் வருகை தருகின்றனர்" என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சமூகத்தில் வாழும் எந்தவொரு நபருக்கும் மனநலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

"சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எவருக்கும் மனநலப் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 'எனக்கு இது வராது, பக்கத்து வீட்டுக்காரருக்குத்தான் வரும்' என்று எண்ணியிருக்கக் கூடாது. யாருக்கேனும் மனநலப் பிரச்சனை இருந்தால், அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மனநோய்களின் போது நமது எண்ணங்கள்தான் மாற்றமடைகின்றன. அதனால் நமது எண்ணங்கள் மாறியிருப்பதை நம்மால் உணர முடியாமல் போகலாம். ஆனால் நமக்குத் தெரியாவிட்டாலும் மற்றவர்களால் அதனை உணர முடியும். எனவே, எந்தவொரு வைத்தியர்களிடமாவது காண்பிக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமக்கு நோய் உள்ளது என்பதை அறியாத காரணத்தினாலேயே மருந்து சாப்பிட முடியாமல் போகிறது. மற்றைய விடயம் என்னவென்றால், இது நமக்கு நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; அவ்வேளையில் அவர்களால் இயல்பாகப் பணியாற்ற முடியாது. அந்த காலப்பகுதியில் நோயின் காரணமாகவே அவர்களின் நடத்தை மாறுகிறது. அதற்குச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்தியதும், பழைய நபர் மீண்டும் நம்மிடம் திரும்பி வருவார். எனவே, தகுதியான ஒரு வைத்தியர் மற்றும் மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெற வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.