மட்டக்களப்பு - வவுணதீவில் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுடன் மது அருந்திய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்



வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் இணைந்து மதுபானம் அருந்திய குற்றச்சாட்டின் கீழ், வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (01) முதல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை (29) இரவு கண்ணன்குடா பகுதியைச் இருவருடன் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளார்.

இதன்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியுள்ளது. இருவரும் மாறி மாறித் தாக்கிக்கொண்டதில் பலத்த காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, காயமடைந்த இருவரும் கசிப்பு வியாபாரம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், அவர்களுடன் இணைந்து பொலிஸ் கான்ஸ்டபிள் மதுபானம் அருந்தியதுடன், சண்டை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் அதிக மதுபோதையில் இருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்து மதுபானம் அருந்தியமைக்காகக் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை உடனடியாகச் செயற்பாட்டுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்து பொலிஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.