சவூதி அரேபியாவின் நிகழ்வில் சாணக்கியன் பங்கேற்பு ; அனோஜனின் விடுதலைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் உறுதி



சவூதி அரேபியா இராச்சியத்தின் 96ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியா தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு வரவேற்பு நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் கலந்து கொண்டார்.

இந்நிகழ்விற்கான அழைப்பை இலங்கைக்கான சவூதி அரேபியா தூதரகத்தின் பொறுப்பதிகாரி மேன்மைதங்கிய யாசர் அப்துல்ரஹ்மான் அல்-ஹஸ்மி (H.E. Yaser Abdulrahman Al-Hazme) அவர்கள் விடுத்திருந்தார். வழமையாக சாணக்கியன் அவர்கள் இவ் நிகழ்வில் பங்கு பற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சந்திப்பின்போது, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவின் விடுதலைக்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்குவதாக ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் சாணக்கியனிடம் உறுதி அளித்தார்.

இந்நிலையில், சவூதி அரேபியா இராச்சியத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு சவூதி அரேபிய மக்களுக்கும், இலங்கைக்கான சவூதி அரேபியா தூதரகத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.