மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன் தப்பியோட்டம்



மட்டக்களப்பு, சித்தாண்டி பகுதியில் கணவனின் தாயாரை சந்திக்கச் சென்ற மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (24) மாலை இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது 31 வயதுடைய கணவருக்கும் 10 மற்றும் 7 வயதுடைய இரண்டு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணவன் மதுபானம் அருந்திவிட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று மனைவியின் கையடக்கத் தொலைபேசியை கணவன் எடுத்துச் சென்று விற்பனை செய்ததாகவும், இதனையடுத்து இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியேறிய மனைவி, சித்தாண்டி பகுதியில் வசிக்கும் கணவனின் தாயாரிடம் முறையிடுவதற்காக சென்றுள்ளார்.

அவரைப் பின்தொடர்ந்து சென்ற கணவன், தனது தாயாரின் வீட்டில் வைத்து மனைவியை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான கணவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.