தமிழ்-கனேடிய Netflix நடிகை மீதான இனவாதக் கருத்துகளை நிறுத்துமாறு அர்ச்சுனா MP வலியுறுத்தல்


தமிழ்-கனேடிய நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் சர்வதேச சாதனைகள் குறித்து இலங்கையர்கள் பெருமைப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இன வேறுபாடுகளைக் கடந்து மைத்ரேயி ராமகிருஷ்ணனின் வெற்றியை இலங்கையர்கள் பாராட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் மற்றும் அவரது படைப்புகள் தொடர்பில் சில சிங்கள சமூக ஊடகப் பயனர்களால் இனவாத கருத்துகள் பதிவிடப்படுவதாகக் கூறிய அர்ச்சுனா, இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றவர்களின் சாதனைகளை மதித்து பாராட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்துள்ள புதிய Netflix திரைப்படமான ‘Best of the Best’ தொடர்பில் சமூக ஊடகங்களில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திரைப்படத்தின் விளம்பர நிகழ்வுகளின்போது தனது தமிழ் மற்றும் இலங்கைப் பூர்வீகம் குறித்து மைத்ரேயி பேசியதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை தீவிரமடைந்ததாகவும், சில சமூக ஊடகப் பக்கங்கள் திரைப்படத்திற்கு எதிர்மறையான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களை வழங்குமாறு பதிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகையை இலக்காகக் கொண்டு அவமதிப்பான கருத்துகளும் பதிவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திலுள்ள மிசிசாகாவில் இலங்கைத் தமிழ் பெற்றோருக்கு பிறந்து வளர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன், Netflix தொடரான ‘Never Have I Ever’ இல் தேவி விஸ்வகுமார் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானார்.