
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் சுமார் 14 இலட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பலன்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே முற்றிலும் நிராகரித்துள்ளார்.
அனுராதபுரத்தில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
தற்போது 12 இலட்சத்து 6,000 (1,206,000) பேர் மட்டுமே அஸ்வெசும பயன்களைப் பெற்று வருவதாக சுட்டிக்காட்டினார். எனவே, 14 இலட்சம் பேரின் பலன்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெளிவுபடுத்திய அமைச்சர், நடைபெற்று வரும் பயனாளிகள் மீளாய்வு நடவடிக்கை காரணமாக பலன் பெறுவோரின் எண்ணிக்கையில் எவ்வித குறைப்பும் ஏற்படவில்லை.
முதற்கட்ட மீளாய்வின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 991,000 பயனாளிகளின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது இக்கட்டத்தின் கீழ் சுமார் 9,89,000 பேர் பயனடைந்து வருகின்றனர்.
இதன் மூலம் புதிய பட்டியலின்படி பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் உள்ளடங்கும் சுமார் 2,15,000 பயனாளிகளுக்கான மீளாய்வு அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதுவரை தற்போதைய எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இன்றி அவர்களுக்கான பலன்கள் தொடர்ந்து வழங்கப்படும்.
அத்துடன், முதற்கட்டத்தின் கீழ் மேலும் சுமார் 7,40,000 பயனாளிகள் மீளாய்வு செய்யப்படவேண்டியுள்ளது.
அனைத்து மீளாய்வு நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னர், அஸ்வெசும பயனாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை குறையாது, மாறாக அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. எனவே, நலன்புரி உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் பொய் மற்றும் தவறான தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.








.jpg)



