
வேகமாக வளர்ச்சியடைந்துவரும் இளைஞர் சமுதாயம் பயனடையக்கூடிய வகையில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, உற்பத்தித்திறன் கொண்ட வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் இயலுமையே தற்போதைய மக்கள் தொகை மாற்றத்தின் பெறுபேற்றைத் தீர்மானிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய காலத்தில் வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரங்களில் வேலைவாய்ப்புக்களின் எதிர்காலம் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரயோகம் என்பன பற்றிக் கருத்துரைத்துள்ள அஜய் பங்கா, அடுத்த 15 ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் சுமார் 120 கோடி இளைஞர்கள் 18 வயதை அடைவார்கள் என்றும், அரசுகளும் நிறுவனங்களும் அவர்கள் முன்னேறுவதற்கு அவசியமான அடிப்படை வசதிகளை வழங்கினால், இந்த இளைஞர் எண்ணிக்கை அந்தந்த நாடுகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய பெரும் பலமாக மாறும் என்றும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
'அடுத்த 15 ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் 120 கோடி இளைஞர்கள் 18 வயதை அடைவர். அவர்கள் வளரும்போது தூய்மையான குடிநீர், காற்று, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் திறன் மேம்பாடு என்பவற்றையும், பின்னர் அர்த்தமுள்ள பொருளாதார வாய்ப்புக்களையும் பெற்றால் மாத்திரமே, இந்த பெருந்தொகை மனிதவளத்தைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தமுடியும்' என அஜய் பங்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை 'வேலைவாய்ப்பு என்பதை ஒரு நிறுவனத்தில் பணிபுரிவது அல்லது ஒரு தொழிலை ஆரம்பிப்பது என்பதற்கும் அப்பால் பரந்துபட்ட அடிப்படையில் நோக்கவேண்டும். சமுதாயத்தில் பயனுள்ள விதத்தில் இயங்குவதற்கான நம்பிக்கையையும் சுயமரியாதையையும் மக்களுக்கு அளிக்கும் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது உலகளாவிய ரீதியில் கொள்கை வகுப்பாளர்களின் முன்னுரிமைக்குரிய விடயங்களில் ஒன்றாகும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனியார் மூலதனமே பெருமளவிலான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பெரும்பாலான நாடுகளில் 75 - 85 சதவீதமான வேலைவாய்ப்புக்கள் தனியார் துறையினாலேயே உருவாக்கப்படுகின்றன என்றார்.












