மட்டக்களப்பில் 11 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை



மட்டக்களப்பில் 11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய 37 வயதான குற்றவாளிக்கு 20வருட கடூழிய சிறைத்தண்டனையும் தண்டப்பணமும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் நடைபெற்ற இந்த பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சட்டமா அதிபரால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டவருக்கே மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வெள்ளிக்கிழமை (09)இந்த தீர்ப்பினை வழங்கினார்.

கைது செய்யப்பட்டவருக்கு எதிராக தண்டனைச் சட்டகோவை 354இன் கீழ் சிறுமியை கடத்திச் சென்றமை மற்றும் தண்டனை சட்டக்கோவை 364இன் கீழ் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை ஆகிய இரு குற்றச்சாட்டுகளின் கீழ் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 04 ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சட்டமா அதிபரால் தொடரப்பட்ட வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணியான எஸ். அனுஷாங்கன் ஆஜராகி வழக்கினை நடத்திவந்திருந்தார்.

துஸ்பிரயோககத்துக்குள்ளான சிறுமியால் பெரியப்பா என அழைக்கப்படும் குறித்த நபர் குற்றவாளியாக கடந்த மாதம் 25ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டு இன்றையதினம் வெள்ளிக்கிழமை தண்டனை வழங்கும் தீர்ப்பை நீதிபதி அறிவித்தார்.

இதன் பிரகாரம் இந்த வழக்கின் தண்டனைக்கான தீர்ப்பாக முதலாவது குற்றமான பெற்றோருக்குத் தெரியாது கவர்ந்து சென்றமைக்காக 5 வருடங்களும், இரண்டாவது குற்றமான பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமைக்காக 15 வருடங்களுமாக 20 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 01 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்கவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் நட்ட ஈட்டைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தண்டப்பணமாக ரூபா 20ஆயிரம் செலுத்தப்படவேண்டும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார்.