6 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையைச் சேர்ந்த பிக்குவுக்கு அவுஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை


அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பௌத்த விகாரையொன்றில் ஆறு சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பௌத்த பிக்குவுக்கு 13 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தம்ம சரண பௌத்த விகாரையின் பிரதம பிக்குவாகப் பணியாற்றிய 71 வயதுடைய நாவொதுன்னே விஜித தேரருக்கு, விக்டோரியா மாநிலத்தின் கவுண்டி நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (08) இந்தத் தண்டனையை விதித்துள்ளதாக ABC News Australia செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி பர்தீப் திவானா, குற்றவாளி இலங்கை பௌத்த சமூகத்தில் தனக்கிருந்த மதிப்பையும் நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

1994 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மெல்போர்னின் ஸ்பிரிங்வேல் மற்றும் கீஸ்பரோ பகுதிகளில் இயங்கிய விகாரையில் இந்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

சிறுமிகளுக்கு எதிரான ஒன்பது பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் மற்றும் எட்டு பாலியல் முறைகேடுகள் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளில் விஜித தேரர் 2025 ஆம் ஆண்டு குற்றவாளியாகக் காணப்பட்டார்.

பெற்றோருடன் சமய வழிபாடுகளுக்காக விகாரைக்கு வருகை தந்த சிறுமிகளைத் தனது தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் சிறுமிகளின் பெற்றோர் அருகிலுள்ள அறைகளில் இருந்தபோதும் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் தமது பிள்ளைகள் விகாரையில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், குற்றவாளி அந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீண்டகால உளவியல் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் இன்றும் பௌத்த சமய வழிபாடுகளுடன் தொடர்புடைய மன உளைச்சல்களை அனுபவித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவங்கள் இடம்பெற்று பல ஆண்டுகளுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, விஜித தேரருக்கு எதிராக 2023 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

விசாரணைகளின்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருந்ததுடன், சில முறைப்பாட்டாளர்களைத் தனக்கு நினைவில் இல்லை எனவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், விதிக்கப்பட்டுள்ள 13 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனையில் குறைந்தபட்சம் ஒன்பது ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னரே அவர் பிணை நிபந்தனைகளின் கீழ் விடுதலை பெறுவதற்கான தகுதியைப் பெறுவார்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் இருந்த தனது ஆதரவாளர்களைப் பார்த்து விஜித தேரர் புன்னகைத்து கையசைத்தமை பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக ABC News தெரிவித்துள்ளது.

இலங்கையில் பிறந்த விஜித தேரர் தனது 15 ஆவது வயதில் பௌத்த துறவற வாழ்க்கையில் இணைந்துள்ளார். பின்னர் சுவீடனுக்குச் சென்று அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்ற அவர், 1994 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து தம்ம சரண விகாரையின் பிரதம பிக்குவாகப் பொறுப்பேற்றுள்ளார்.

சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர் அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படக்கூடும் எனவும், சுவீடனுக்குத் திரும்புவதற்கு அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஜித தேரர் ஞாபகமறதி நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம்: ABC News Australia