
16 வயதுக்கும் குறைவான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 54 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
16 வயதுக்குக் குறைந்த மகளையே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமைத் தொடர்பில் , சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணியகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டு கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தீர்ப்பு வியாழக்கிழமை (29 ) கம்பஹா மேல் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. இதன்போது, பிரதிவாதியான பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த 3 குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதி, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தனித்தனியாக 18 வருடங்கள் வீதம் கடூழிய சிறைத்தண்டனையும், 50,000 ரூபா அபராதமும் விதித்தார்.
அதற்கமைய, அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்குமாக மொத்தம் 54 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும், 1,50,000 (ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்) ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தண்டப்பணத்தைச் செலுத்தத் தவரும் பட்சத்தில் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தனித்தனியாக ஒரு வருடம் வீதம் மேலும் 3 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்டதுடன், அந்நட்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் மேலும் 2 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.












