'அர்னாப்' சூறாவளி: 18 மாவட்டங்களில் 21,240 பேர் பாதிப்பு – மூவர் உயிரிழப்பு!



'அர்னாப்' சூறாவளி காரணமாக நிலவும் சீரற்ற வானிலையினால் நாட்டின் 18 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் இன்று சனிக்கிழமை (31) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் பதிவான தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 18 மாவட்டங்களில் உள்ள 136 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 5,768 குடும்பங்களைச் சேர்ந்த 21,240 நபர்கள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர். அனர்த்தங்களால் 8 வீடுகள் முழுமையாகவும், 737 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அதிகபட்சமாக இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 15 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,666 குடும்பங்களைச் சேர்ந்த 10,051 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஒரு உயிரிழப்பும், இருவர் காயமடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், 101 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இரண்டாவதாக அதிக பாதிப்பு பதிவான புத்தளம் மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 1,850 குடும்பங்களைச் சேர்ந்த 6,900 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரு உயிரிழப்பு மற்றும் இருவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளனர்.

நாட்டிலேயே அதிகளவிலான வீடுகள் சேதமடைந்த மாவட்டமாக மாத்தறை பதிவாகியுள்ளது. அங்கு ஒரு முழுமையான வீட்டுச் சேதம் உட்பட மொத்தம் 113 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பணிகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.