
2050 ஆம் ஆண்டளவில் 'பூஜ்ஜிய கார்பன்' (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறும் சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் வேகமாக அதிகரித்து வரும் மின் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக அனைத்து அரச, தனியார் மற்றும் ஒழுங்குபடுத்தல் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் முறையான பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வரும் பின்னணியில் அரச துறை, கல்வி உட்பட பல துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பது சுற்றாடல் ரீதியான சவாலாக அமைந்தபோதிலும், பொறுப்புணர்வுடன் அவற்றைச் சேகரித்தல், மீள் பயன்பாடு செய்தல் மற்றும் அறிவியல் ரீதியான மீள்சுழற்சி மூலம் நிலையான பசுமைப் பொருளாதார மதிப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் காணப்படுவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இலத்திரனியல் - கழிவுகளை திறம்பட முகாமைத்துவம் செய்வதற்கு உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை முழு ஆயுட்கால சுழற்சியையும் உள்ளடக்கும் வகையில் செயற்படுவது அத்தியாவசியமான காரணியாகும்.
இதற்காக கொள்கை மற்றும் சட்டப் பின்னணியை வலுப்படுத்தி, தேசிய சுற்றாடல் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள “விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு” (EPR) ஏற்பாடுகள் மற்றும் விரைவில் அனுமதி பெறப்படவுள்ள மின் மற்றும் இலத்திரனியல் கழிவு முகாமை தொடர்பான தேசியக் கொள்கையை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் தங்களால் கைவிடப்பட்ட மின்-சாதனங்களை இலகுவாகவும் பாதுகாப்பாகவும் அகற்றுவதற்கு இடமளிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு சேவை மையக் கட்டமைப்பு மற்றும் சிறப்புச் சேகரிப்பு மையங்கள் ஊடாக இத்திட்டம் தொடர்ச்சியாகச் செயற்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.












