நாட்டில் சீரற்ற காலநிலையால் 21 மாவட்டங்களில் 9,351 பேர் பாதிப்பு – 1,754 வீடுகள் சேதம்!



நாட்டில் நிலவும் கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக வரை 21 மாவட்டங்களைச் சேர்ந்த 199 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 2,572 குடும்பங்களைச் சேர்ந்த 9,351 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்த நிலைமையினால் 27 வீடுகள் முழுமையாகவும், 1,727 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன், அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் பாதுகாப்பான 2 இடங்களில் தங்க வைக்கப்பட்டு நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு அந்தமான் தீவுகளை ஒட்டிய வங்காள விரிகுடா பகுதியில் தற்போது உருவாகியுள்ள புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடைய அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. பின்னர், இத்தொகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஆழமான தாழமுக்கமாக மாறக்கூடும் என்பதுடன், ஒக்டோபர் 26 ஆம் திகதி காலை வேளையில் வங்காள விரிகுடாவின் மத்திய மேற்குப் பகுதியில் புயலாக வலுவடையும் அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது குறிப்பிடப்பட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகருமாறும், மீனவர்கள் மற்றும் கடல் பயணிகள் இனி வரும் காலங்களில் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை அவதானத்துடன் பின்பற்றுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.