
நிகவெரட்டிய பகுதியில் இரத்தக்களரி ஏற்படக்கூடும் எனவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொடர்பிலும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்ட 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று (13) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
நிகவெரட்டிய, கொட்டவெஹெர பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த மாணவர், கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்தப் பதிவில், அன்றைய தினம் நிகவெரட்டிய பகுதி இரத்த வெள்ளமாக மாறும் எனவும், இரத்தக்களரி மற்றும் கர்மவினை தொடர்பான கருத்துகளும் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அவர் குருநாகலுக்கு விஜயம் மேற்கொள்வதற்கான சாத்தியம் குறித்தும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறான சமூக வலைத்தளப் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பதால், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, குறித்த மாணவர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.












