
புத்தளம் உடப்பு பிரதேசத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகையை பரிமாறிக்கொள்ள முயன்ற இரு இந்திய டவ் படகுகள் மற்றும் இரு உள்ளூர் டிங்கி படகுகளுடன் 11 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு கடற்படை கட்டளைக்குக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினரும் இலங்கை கரையோரக் காவல்படைத் திணைக்களத்தினரும் இணைந்து நேற்று புதன்கிழமை 21 ஆம் திகதி மாலை இந்த சிறப்பு சோதனையை முன்னெடுத்தனர்.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு, 60 உறைகளில் பொதி செய்யப்பட்டிருந்த சுமார் 2,400 கிலோகிராம் பீடி இலைத் தொகை கைப்பற்றப்பட்டது.
இந்திய டவ் படகுகளில் வந்த 07 இந்தியச் சந்தேகநபர்களும், உள்ளூர் டிங்கி படகுகளுடன் தொடர்புடைய 04 இலங்கைச் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகை, டவ் படகுகள், டிங்கி படகுகள் மற்றும் கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு சுங்கத் தடுப்புப் பிரிவு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.












