சுற்றுச்சூழலை அழிப்பவர்களுக்கு ரூ. 2 கோடி வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை - பிரதமர் ஹரிணி



நாட்டின் உண்மையான முதலீடு என்பது பிள்ளைகளின் கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது என்றும், சூழலை நேசிக்கும் ஆளுமைமிக்க சந்ததியினரை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவின் மிகப்பெரிய இளஞ்சிவப்பு படிகப் பாறை (Rose Quartz Rock) அமைப்பும், மிகப்பெரிய நாகமரக் காடும் அமைந்துள்ள தேசிய நாமல் உயன பூங்காவின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரை ஆற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அபாயகரமான கழிவுகளைச் சூழலில் கொட்டி இயற்கையை அழிப்பவர்களுக்கு எதிராக 20 மில்லியன் ரூபாய் (ரூ. 2 கோடி) வரை தண்டப்பணம் மற்றும் சிறைத்தண்டனை விதிப்பதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், பாதுகாக்கப்பட்ட ஈரநிலங்களை அழிப்பவர்களுக்கு எதிராக 1 மில்லியன் முதல் 10 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வெறும் வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களின் அரசாங்கம் பல நடைமுறை முடிவுகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடிந்தது என்றும், இதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்களின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மேலும் கடுமையாக்கப்படும் என்றும் கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதமர், பல நூற்றாண்டுகாலப் பெருமைமிக்க வரலாற்றையும், தனித்துவமான பல்லுயிர்ப் பெருக்கத்தையும், சுற்றுலா ஈர்ப்பையும், பெரும் கல்வி மதிப்பையும் கொண்ட தேசிய நாமல் உயன எதிர்காலச் சந்ததிக்காகப் பாதுகாப்பதற்குத் தமது முழு வாழ்வையும் அர்ப்பணித்த வனவாசி ராஹுல தேரருக்கும், அவரது உன்னதமான முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அரசாங்கத்தின் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.

உலகில் எந்தவொரு நாட்டின் உண்மையான முதலீடும் கட்டடங்களுக்குள் இல்லை என்றும், அது பிள்ளைகளின் கல்வி மற்றும் அவர்களின் ஆளுமை வளர்ச்சியிலேயே உள்ளது என்றும் தெரிவித்த பிரதமர், பரீட்சைகளுடன் மட்டும் நின்றுவிடாமல் சூழலை நேசிக்கும் முழுமையான ஆளுமைமிக்க பிள்ளைகளை உருவாக்கவே புதிய கல்வி மறுசீரமைப்புகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறினார்.

மேலும், நடைமுறைப்படுத்தப்பட்ட நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் காரணமாக இன்று நாமல் உயனயை சுற்றியுள்ள மக்களுக்கு இலவசமாகத் தூய்மையான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், எதிர்காலச் சந்ததிக்காகச் சூழலையும் பிள்ளைகளின் கல்வியையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.