செயற்திறனற்ற 34 அரச நிறுவனங்களை மூட அல்லது ஒன்றிணைக்க நடவடிக்கை – ஜனாதிபதி அநுர அறிவிப்பு!



தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் போது, திறமையான மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நில அளவை சேவை நாட்டிற்கு அவசியமானது என்றும், அதற்கான வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை (23) முற்பகல் நடைபெற்ற அரச நில அளவையாளர் சங்கத்தின் 100ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் அரச பொறிமுறையில் பழமையான திணைக்களங்களில் ஒன்றான நில அளவைத் திணைக்களத்தினதும் நூற்றாண்டைப் பூர்த்தி செய்யும் அரச நில அளவையாளர் சங்கத்தினதும் பெருமைமிக்க பயணத்தில் தொழில்சார் கண்ணியம் மற்றும் சேவைத் தரங்களைப் பாதுகாத்து நாட்டின் அபிவிருத்திச் செயல்முறைக்கு வழங்கி வரும் விசேட பங்களிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.

தொழில்நுட்ப முன்னேற்றம், தொழில்சார் வளர்ச்சி மற்றும் அறிவுப் பகிர்வை ஊக்குவித்தல், நில அளவை சேவையின் கடந்தகால தலைமுறைகளின் சேவையைப் பாராட்டுவதுடன், எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்காக புதிய தலைமுறைக்கு உகந்த வகையில் நில அளவையாளர்களைத் தயார்படுத்துதல், அத்துடன் துல்லியமான மற்றும் நம்பகமான நில அளவை சேவைகள் ஊடாக தேசிய அபிவிருத்திக்குத் தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்வதற்காக அரச நில அளவையாளர் சங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

100ஆவது வருடாந்த மாநாட்டில் பங்கேற்றமையைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதிக்கு இதன் போது நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

நமது பொருளாதாரத்தை மிகவும் உறுதியான நிலைக்குக் கொண்டு வருவதற்கும், அந்தப் பொருளாதாரத்தின் மூலம் பெறப்படும் நன்மைகள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் நாங்கள் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

கணிசமான அளவில் அரசாங்க வருவாயை மிகவும் வலுவான நிலைக்குக் கொண்டுவர எம்மால் முடிந்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 2025ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 110% ஆக வளர்ச்சியடைந்தது. இதற்கு முன்னர் எந்தவொரு வரவுசெலவுத் திட்டத்திலும் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் இலக்குகளை அடைய முடியாமல் இருந்ததோடு, மிகவும் குறைந்த மட்டத்திலேயே அவை காணப்பட்டன.

2026ஆம் ஆண்டிலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகிய பிரதான வருவாய் மூலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்குகளை அடைந்து மிகவும் சாதகமான வருவாய் நிலையை எட்ட எம்மால் முடியும்.

கடந்த காலங்களில் அரசாங்கத்திடம் பணம் இல்லாததால், தொடர்ச்சியாக பணத்தை அச்சிட அல்லது வங்கி கட்டமைப்பிலிருந்து கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. 2022 காலப்பகுதியில் திறைசேரிக் கணக்கு சுமார் 700 பில்லியன் ரூபா எதிர்மறை மட்டத்தில் காணப்பட்ட போதிலும், இன்று திறைசேரிக் கணக்கில் சுமார் ஒரு டிரில்லியன் ரூபா மேலதிக நிதி காணப்படுகிறது. இதன் மூலம் நிலவிய ரூபா நெருக்கடி கணிசமான அளவு தீர்க்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு தேவையான டொலர்களை ஈட்ட முடியாமையே நெருக்கடிக்கு காரணமாக அமைந்தது. 2025ஆம் ஆண்டில் நடப்புக் கணக்கின் இருப்பு - அதாவது நாட்டிற்குள் வரும் மற்றும் வெளியேறிய டொலர் தொகைக்கு இடையிலான வேறுபாடு- மிக முக்கியமான நிலையை அடைந்தது.

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் நடப்புக் கணக்கில் மூன்று சந்தர்ப்பங்களில் மாத்திரமே மேலதிகமான நிதி காணப்பட்டன. அச்சந்தர்ப்பங்களில் சுமார் 300 மில்லியன் டொலர்கள் மட்டுமே அதிகரிப்பு காணப்பட்டது. ஆனால் 2025இல் நமது நடப்புக் கணக்கு 1800 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்தது.

எனினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர்ச் சூழலினால் நாம் எதிர்பாராத தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த ஆண்டு எண்ணெய் இறக்குமதிக்காக 4 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில், இம்முறை ஆகஸ்ட் மாத முடிவிலேயே 4 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

ஆண்டின் மூன்றில் இரண்டு காலப் பகுதியில் 4 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதால், ஆண்டின் இறுதியில் அது 6 பில்லியன் டொலர்களைத் தாண்டக்கூடும். எனவே, டொலர்களுக்கான அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதே நமது பிரதான சவாலாகும்.

டொலர்களில் கடன் பெறாமல் உள்நாட்டு (திறைசேரி) நிதியைக் கொண்டே பெருமளவிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

குருநாகல் - கலேவெல அதிவேக நெடுஞ்சாலை, ரம்புக்கன - கலகெதர அதிவேக நெடுஞ்சாலை, கஹதுடுவ - இங்கிரிய அதிவேக நெடுஞ்சாலை ஆகிய திட்டங்கள் மற்றும் களனிவெளி ரயில் பாதையை நவீனப்படுத்தி மின்சார ரயில் சேவை திட்டத்தை 600 பில்லியன் ரூபா செலவில் திறைசேரி நிதியைக் கொண்டு அடுத்த ஆண்டில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், திட்டங்களுக்கு ரூபாயில் செலவழித்தாலும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் இரும்பு போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால் டொலர் செலவீனம் ஏற்படுகிறது.

இம்முறை மூலதனச் செலவீனம் 1330 பில்லியன் ரூபாவிலிருந்து அடுத்த ஆண்டிற்காக 2000 பில்லியன் ரூபா (2 டிரில்லியன்) வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மூலதனச் செலவீனம் அதிகரிக்கும் போது டொலர்களுக்கான அழுத்தம் அதிகரிப்பதால், டொலர்களை ஈட்டுவதும் டொலர்கள் வெளியேறுவதைக் குறைப்பதும் நமது பிரதான பொருளாதார மூலோபாயமாக இருக்க வேண்டும்.

நாட்டில் ஏற்படும் அதிர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான ரூபா நம்மிடம் இருந்தாலும், வெளிப்புற அதிர்வுகளை (சுற்றுலாத்துறை, வெளிநாட்டு தொழிலாளர்களின் வருமானம், எரிபொருள் விலை) எதிர்கொள்ளும் அளவுக்கு பொருளாதாரம் இன்னும் பலமடையவில்லை. வெளிப்புற அதிர்வுகளைத் தாங்கும் பொருளாதாரத்தை உருவாக்குவதே நமது திட்டமாகும்.

திறைசேரியில் சேரும் நிதியைதை கீழ்மட்ட மக்கள் வரை கொண்டு சென்று அவர்களின் சேவைகள், காணிப் பிரச்சினைகள், விவசாயம், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்க வேண்டியது அரசியல் அதிகாரமன்றி பலமான அரச பொறிமுறையாகும். பலமான அரச பொறிமுறை இன்றி நிதியைக் கீழ்மட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாது.

கடந்த காலத்தில் அரச துறை வேலைகளுக்கு அதிக விருப்பம் காணப்பட்ட போதிலும், தற்போது தொழில்வல்லுநர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமையினால் அரச சேவையின் ஈர்ப்பு குறைந்துவிட்டது. அதனால் பொறியியலாளர்கள், IT வல்லுநர்கள் மற்றும் முகாமையாளர்களைப் பணியமர்த்துவதில் சிரமங்கள் உள்ளன.

இதற்காக நடவடிக்கை எடுத்து 2025 வரவுசெலவுத் திட்டத்தில் அரச சேவையின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், அது 2025, 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளில் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். ஒரு கட்டத்திற்கு தலா 110 பில்லியன் ரூபா வீதம் செலவழிக்கப்படுவதுடன், 2027ஆம் ஆண்டாகும்போது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 33,000 கோடி ரூபா (330 பில்லியன்) மேலதிக சம்பளச் சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும்.

2028 வரவுசெலவுத் திட்டத்தில் புதிதாக அடிப்படைச் சம்பள உயர்வு இருக்காது என்பதால், கொடுப்பனவுகள் குறித்து கூடுதலாக பரிசீலிக்க முடியும். இருப்பினும் இம்முறை வரவுசெலவுத் திட்டத்திலும் அத்தியாவசிய கொடுப்பனவுகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நமக்கு மிகவும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நில அளவை சேவை தேவைப்படுகிறது. நில அளவை சேவைக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப உபகரணங்களுக்கான மதிப்பீட்டு அறிக்கையினை வழங்கினால் வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முடியும்.

அதேபோன்று மனித வள மேம்பாடு மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையை விட தற்போதைய தேவைகள் மாறியுள்ளதால், ஆய்வு செய்து சேவைப் பிரமாணக் குறிப்பில் தேவையான மாற்றங்களைச் செய்யவும் கவனம் செலுத்தப்படும்.

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நியமனங்கள் காரணமாக அரச சேவையின் கீழ் மட்டங்கள் நிரம்பிக் காணப்படுவதால் பெரும் செலவுச் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, அத்தியாவசியமற்ற அல்லது செயற்திறனற்ற 34 நிறுவனங்களை மூடுவதற்கு அல்லது ஒன்றிணைப்பதற்கு நிதி அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. சிறந்த பலமான தொழில்வல்லுநர்களைக் கொண்ட ஈர்ப்புமிக்க அரச சேவையை உருவாக்குவதே நமது நோக்கமாகும்.

காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக்க ஜயகொடி, கமத் தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்கிரமசிங்க, நில அளவையாளர் ஜெனரல் டீ.எம்.ஐ. திலகரத்ன ஆகியோருடன் அரச நில அளவையாளர் சங்கத்தின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.