நாட்டுக்கு நன்மை கிடைத்து, எமது கலாசார மரபுகள் பாதுகாக்கப்படுமெனில் 50 நாட்கள் மாத்திரமல்ல, 500 நாட்கள்கூட சிறையில் இருக்கத் தயாராக உள்ளேன் - நாமல் ராஜபக்ஷ






தனது சிறைவாசத்தால் பொதுமக்களின் பொருளாதாரச் சுமை குறைந்து, நாட்டின் கலாசார மரபுகள் பாதுகாக்கப்படுமெனில் 500 நாட்கள்கூட சிறையில் இருக்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 23ஆம் திகதியிடப்பட்ட நீண்ட அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர், ஒக்டோபர் 24ஆம் திகதியுடன் தான் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் நிறைவடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“எனது நாட்டுக்கு நன்மை கிடைத்து, எமது கலாசார மரபுகள் பாதுகாக்கப்படுமெனில் 50 நாட்கள் மாத்திரமல்ல, 500 நாட்கள்கூட சிறையில் இருக்கத் தயாராக உள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதிநிலை மேம்பட்டு வருவதாக அரசாங்கம் கூறுகின்றபோதிலும், மக்கள் தொடர்ந்தும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்கால் குறைத்தல், எரிபொருள் விலையைக் குறைத்தல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளத்தை அதிகரித்தல், பிணையின்றி வட்டியில்லாக் கடன்களை வழங்குதல், சுமார் 12 இலட்சம் ரூபாவுக்கு Toyota Vitz கார்களை வழங்குதல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், கல்வி மீதான வரிகளை நீக்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகள் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் பிரச்சினைகளை ஒரு அரசியல் குடும்பத்தின் மீது சுமத்தி, தேசிய பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் அவர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

“நாடு இத்தகைய நெருக்கடியான தருணத்தில் இருக்கும்போது, அதன் பிரச்சினைகளின் பாரத்தை ஒரு குடும்பத்தின் பின்னால் மறைக்க முயல்வது அபத்தமானது” என அவர் கூறியுள்ளார்.

புகழ்பெற்ற கொம்பன் யானையான காவந்திஸ்ஸவின் உயிரிழப்பு தொடர்பில் கவலை வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ, நாட்டின் கலாசார மற்றும் இயற்கை மரபுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் மரபுகளைப் பாதுகாத்ததுடன் உயிரினங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலையும் ஏற்படுத்திய தலைவர் என அவர் பாராட்டியுள்ளார்.

மதம் மற்றும் கலாசாரம் தொடர்பான விடயங்களில் ஜனநாயகச் சமூகத்தில் நாகரிகமான கலந்துரையாடல்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். எனினும், அவமதிப்புகள், உண்மைகளைத் திரிபுபடுத்துதல் மற்றும் வெறுப்பைப் பரப்புதல் ஆகியவற்றை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மதம் என்பது போட்டியல்ல; அது ஒன்றிணைந்து வாழ்வதாகும். அது ஒரு காட்சிப்படுத்தல் அல்ல; புரிந்துணர்வாகும்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் இறுதியில் தன்னை விடுவிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.

சிறைவாசம் தனது வாழ்க்கை மற்றும் அரசியல் குறித்து சிந்திப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், சிறைக்கம்பிகளால் தனது சிந்தனைகளையோ அரசியல் உறுதிப்பாட்டையோ கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

“என்னைச் சிறையில் அடைக்கலாம். ஆனால் எமது அணியுடன் நிற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளைச் சிறையில் அடைக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.