கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான குஷ் கஞ்சாவுடன் இந்திய இளைஞர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5.1 கிலோகிராம் குஷ் கஞ்சாவுடன் 24 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் இன்று (26) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் VN671 விமானத்தில் இலங்கைக்கு வந்த குறித்த இளைஞர், அதிகாலை 1.15 மணியளவில் விமான நிலையத்தின் பச்சை வழித்தடம் (Green Channel) ஊடாக வெளியேற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது அவரது பயணப் பொதிகளில் பொலித்தீன் உறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.1 கிலோகிராம் குஷ் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 5 கோடியே 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.