வங்காள விரிகுடாவில் நாளை சூறாவளி – இலங்கையில் பலத்த மழை, காற்று அபாயம்!



வங்காள விரிகுடாவின் அந்தமான் தீவில் காணப்பட்ட தாழ் அமுக்கப் பிரதேசம் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக மாறியுள்ளது. இது இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் கிழக்குப் பகுதியின் மத்தியுடன் இணைந்ததாக வலுவான தாழ் அமுக்கமாக மாறி மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது நாளையளவில் மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளியாக மாறுவதுடன் நாளை மறுதினம் (27) மேலும் தீவிரமடைந்து மிகப் பலமிக்க சூறாவளியாக வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் இல்லாத பொதிலும்நாட்டை ஊடறுத்து காற்று வீசுவதுடன் நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் சில தினங்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரித்தும் காணப்படும்.

ஆகையினால் கடல்சார் ஊழியர்களும் மீனவ சமூகத்தினர்களும் வங்காள விரிகுடாவின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும் என அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.