
பழைய பொருட்களை வாங்குவதாகக் கூறி கிராமங்கள் தோறும் சிறிய ரக லொறி ஒன்றில் சென்றவேளை, வீடொன்றில் 5 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்ற கும்பலை பொலிஸார் கைது செய்த நிலையில், அச்சந்தேக நபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கலகெதர நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
பழைய இரும்பு மற்றும் ஒதுக்கப்பட்ட பலதரப்பட்ட பழைய பொருட்களை வார்க்கும் வேலை என்கிற போர்வையில், சிறிய லொறி ஒன்றில் கலகெதர பகுதிக்குச் சென்ற இருவரே திருட்டுச் செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் குறித்த வீட்டில் இருந்த வயோதிபப் பெண்ணை ஏமாற்றி, 5 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த பழைய அலுமாரி ஒன்றை வாங்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக கலகெதர பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில், உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மேற்படி சந்தேக நபர்களை கைது செய்ததோடு, அவர்கள் பயன்படுத்திய லொரியையும் கைப்பற்றி, திருடிய தங்க நகைகளையும் மீட்டுள்ளனர்.
அவ்வீட்டிலிருந்த 87 வயதுப் பெண்ணின் மகள் கலகெதர பொலிஸில் அளித்த முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் கலகெதர நீதவான் நுவன் குணசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












