கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற அம்பாறை சூப்பர் மார்க்கெட்டுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!



அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த அம்பாறை பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடிக்கு (சூப்பர் மார்க்கெட்) ஒன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் 2026 ஜூன் 15 ஆம் திகதி அல்லது அதனையொட்டிய நாளில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவித்தே, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரசபை நடத்திய திடீர் சோதனையின் போது, இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராமின் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை 255 ரூபாயாக இருந்தபோதிலும், இரண்டு கிலோகிராம் அரிசியை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரி ஒருவருக்கு 560 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்தது.

இதன்படி, ஒரு கிலோகிராம் அரிசி 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட ஒரு கிலோகிராமிற்கு 25 ரூபாய் அதிகமாகவும், இரண்டு கிலோகிராம் அரிசிக்கு மொத்தமாக 50 ரூபாய் அதிகமாகவும் அறவிடப்பட்டுள்ளது.

2025 ஒக்டோபர் 21 ஆம் திகதியிடப்பட்ட 2459/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 94 ஆம் இலக்க கட்டளையின் மூலம், இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராமின் அதிகபட்ச சில்லறை விலை 255 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டளையை மீறியமை தொடர்பில் 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டம் மற்றும் 2021 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் உரிய விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் கொள்முதல் செய்யப்பட்ட அரிசி பொதி, பணப்பரிவர்த்தனைக்குரிய பணம் மற்றும் ரசீது உள்ளிட்ட வழக்குப்பொருட்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டன.

இதற்கமைய, அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் 2026 ஒக்டோபர் 22 ஆம் திகதி இந்த வழக்கு தொடர்பில் 500,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.