
நாடு முழுவதும் கடந்த 17 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பிலான பூர்வாங்க விசாரணை அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம், (National System Operator) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
குறித்த அறிக்கையின்படி, அன்றைய தினம் காலை 11.43 மணியளவில் நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி அலகில் விநியோகிக்கப்பட்டு வந்த 187 மெகாவாட் மின்சாரம் 450 மில்லி செக்கன்களுக்குள் மின்சார கட்டமைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மின்சார அமைப்பின் அதிர்வெண் (Frequency) வேகமாக 48.75 ஹெர்ட்ஸாகக் குறைவடைந்துள்ளதுடன், குறித்த சம்பவம் ஆரம்பமாகி 4.1 செக்கன்களுக்குள் ஒட்டுமொத்த மின்சார கட்டமைப்பும் செயலிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சார அமைப்பின் அதிர்வெண் குறையும் சந்தர்ப்பங்களில் அதன் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காகச் செயற்படுத்தப்படும் தானியங்கி மின் சுமை துண்டிப்பு முறையின் (Under Frequency Load Shedding – UFLS) 5 கட்டங்களும் அந்தச் சந்தர்ப்பத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, 449.2 மெகாவாட்டுகளுக்கு இணையான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், இது மின் தடை ஏற்படுவதற்கு முன்னர் இருந்த 1,135 மெகாவாட் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் 39.6 சதவீதத்திற்குச் சமமானதாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த சம்பவத்தினால் மின்சார கட்டமைப்பு முழுமையாகச் செயலிழப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல மின் நிலையங்களின் பாதுகாப்பு கட்டமைப்புகளும் செயற்பட்டு செயலற்றன
இதற்கிடையில், நுரைச்சோலை மின் நிலையத்தின் உற்பத்தி அலகுகளுக்கு மேலதிகமாக விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல, சமனலவெவ, லக்ஸபான மற்றும் பல நீர்மின் நிலையங்களின் உற்பத்தி அலகுகளும் பாதுகாப்பு கட்டமைப்புகள் செயற்பட்டதன் காரணமாகச் செயலற்ற நிலைக்குச் சென்றுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார கட்டமைப்பு செயலிழந்ததைத் தொடர்ந்து அதனை மீள இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பணிகளை தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் உடனடியாக ஆரம்பித்ததுடன், அதற்கமைய ஒட்டுமொத்தப் பரிமாற்ற கட்டமைப்பையும் (Transmission System) மீள இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கு 05 மணி 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 4 பிரதான கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மின் விநியோகத்தை மீள ஆரம்பிக்க தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மகாவலி கட்டமைப்பின் கீழ் கொத்மலை மற்றும் விக்டோரியா, லக்ஸபான அமைப்பின் கீழ் புதிய லக்ஸபான மற்றும் விமலசூரிய மற்றும் நீர்மின் நிலையம், சமனலவெவ/தெற்கு கட்டமைப்பின் கீழ் சமனலவெவ மற்றும் குக்குலேகங்க, அத்துடன் கொழும்பு கட்டமைப்பின் கீழ் களனிதிஸ்ஸ ஆகிய 4 கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், அறிக்கையின்படி அனைத்து பிரதான உபமின் நிலையங்களையும் பிற்பகல் 4.58 மணியளவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடிந்துள்ளதுடன், இதன் மூலம் ஒட்டுமொத்த தேசிய பரிமாற்ற கட்டமைப்பையும் மீள இயல்பு நிலைக்குக் கொண்டுவர 5 மணி 15 நிமிடங்கள் சென்றதாக அந்த அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மின்சார கட்டமைப்பில் இணைக்கும் போது உற்பத்தி மின் நிலையங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள்
இந்த மின்சார கட்டமைப்பை மீளச் செயற்படுத்தும் போது சில உற்பத்தி மின் நிலையங்களில் தொழில்நுட்ப சிக்கல்களும் செயற்பாட்டுத் தாமதங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக யுகதனவி மின் நிலையத்தின் உற்பத்தி அலகை மீளச் செயற்படுத்தும் போது அதன் துணை கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் காரணமாகத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நுரைச்சோலை மின் நிலையத்தின் முதலாவது உற்பத்தி அலகிலிருந்து மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதற்கான துல்லியமான அடிப்படைக் காரணம் குறித்த அறிக்கையில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், இது குறித்த விரிவான அறிக்கை எதிர்காலத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.












