
உலக மனநல தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சித் தொடரின் ஒரு பகுதியாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) ஆம் திகதி கொழும்பு, டி சரம் ஹவுஸில் இளவயதினர்களுடன் மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான முறைசாரா கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றார்.
இலங்கையில் UNICEF மற்றும் MHPSS.net ஆகிய அமைப்புகள், இளைஞர் ஆலோசனை வலையமைப்புடன் (Youth Advisory Network – YAN) இணைந்து ஏற்பாடு செய்த இக்கலந்துரையாடலில், இலங்கையின் இளம் பராயத்தினர்கள் எதிர்கொள்ளும் மனநலச் சவால்கள் தொடர்பான தமது அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் கரிசனைகளைப் பகிர்ந்துகொள்வதற்காக 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
ஊடாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, பிரதமர் பங்கேற்பாளர்களுடன் திறந்த மனதுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இளைஞர்களின் மனநலனைப் பாதிக்கும் அழுத்தங்கள், ஆதரவை நாடுவதில் காணப்படும் தடைகள் மற்றும் மனநலம் குறித்துக் கலந்துரையாடுவதற்குப் பாதுகாப்பானதும் ஆதரவளிக்கக்கூடியதுமான சூழல்களை உருவாக்குவதன் முக்கியத்துவம் தொடர்பான அவர்களது கருத்துக்களையும் செவிமடுத்தார்.
இலங்கை இளைஞர்களுக்காக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தழுவி உருவாக்கப்பட்ட On My Mind எனும் பொட்காஸ்ட் தொடரையும் பங்கேற்பாளர்கள் பிரதமருக்கு அறிமுகப்படுத்தினர். இத்தொடரை உருவாக்குவதில் இளைஞர் ஆலோசனை வலையமைப்பு (YAN) தீவிரமாகப் பங்களித்துள்ளது. மனநலம் தொடர்பாகத் திறந்த மனதுடன் கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதுடன், மனநலச் சவால்களை நன்கு புரிந்துகொண்டு அவற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான எளிதில் அணுகக்கூடிய வளங்களை இளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதும் இம்முயற்சியின் நோக்கமாகும்.
மனநல விழிப்புணர்வை மேம்படுத்துவதில் இளவயதினர்களின் பங்கு குறித்தும், பாடசாலைகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குள் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம், MHPSS.net அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் ஆலோசனை வலையமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.












